சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31–ந்தேதி தீயில் கருகி உருக்குலைந்தது. இதனால் 2–ந்தேதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடிக்கும் போது 6–வது தளத்தில் இருந்து பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் கீழே விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியது. 20–ந்தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை எடுக்கும் பணி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சுமார் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட அந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகம் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டு, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்த பெட்டகத்தை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் கூறும்போது, ‘கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ‘பணம் பாதுகாப்பு பெட்டகத்தில்‘ பணம் எதுவும் இல்லை. மேலும் அதனுள்ளே சம்பந்தப்பட்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள் இருந்தன. அதில் சில ஆவணங்கள் சேதமடைந்திருந்தது. இதேபோல் தரைதளத்தில் உள்ள பெட்டகத்தில் நகை, வைரம் மற்றும் வெள்ளி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இடிபாடுகளை அகற்றிய பிறகு தான் அந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்க்க முடியும்’ என்றார்.
தரை தளத்தில் தங்கம், வைரம், வெள்ளி ஆகிய பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக 2 நகை பாதுகாப்பு பெட்டகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது முதல் தளம் வரை இடிபாடுகளின் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
தரைத்தளத்தின் இடிபாடு கழிவுகள் அகற்றப்பட்டு, அடுத்தகட்டமாக நகை பாதுகாப்பு பெட்டகங்களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெறும் என்று கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.