இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிசுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது.

சாம்பியன்ஸ் கோப்பை முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அனில் கும்பிளேவின் முதல் பயணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அமைந்தது. சரியாக ஓராண்டுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அங்கு சென்றிருக்கிறது. ஆனால் இந்த முறை பயிற்சியாளர் பதவியில் கும்பிளே இல்லை. கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பதவியை துறந்து விட்டார். இந்த விவகாரத்தை சுற்றி நிறைய சர்ச்சைக்குரிய வி‌ஷயங்கள் உலா வரும் சூழலில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் வலுவான இந்திய அணியே அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய தரப்பில் சில பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத ரஹானே, முகமது ‌ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இந்த தொடரில் நிச்சயம் ஏதாவது ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஷிகர் தவானுடன் ரஹானே அல்லது ‘இளம்’ புயல் ரிஷாப் பான்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்கள். அதே போல் சாம்பியன்ஸ் கோப்பையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அவர்களில் ஒருவரை கழற்றி விட்டு ‘சைனாமேன்’ வகை பவுலர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. கும்பிளே விலகிய நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், கேப்டனுக்கு எதிராக எதையும் சொல்லப்போவதில்லை. அதனால் கேப்டன் விராட் கோலி, ஆடும் லெவன் அணியை தனது இஷ்டத்துக்கு தேர்வு செய்வதில் எந்த தொந்தரவும் இருக்காது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top