சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்

சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி வளைகுடாவின் வேகமான மாறி வரும் அரசியல் சூழல் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

புதிய பட்டத்து இளவரசர் முகம்மது, சவூதியின் பிரதேச போட்டியாளரான ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை பகிரங்கமாக எடுக்கிறார். சமீபத்தில் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துக் கொண்ட விவகாரத்திலும் சல்மானின் பங்கு பெரியது. ஈரானுடனான சவூதியின் போட்டி சன்னி – ஷியா பிரிவுகளுக்கு இடையிலான போட்டி என்பதோடு பிரதேசத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை நிலைநாட்டுவதற்குமானது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஈரான் சவூதியின் மாற்றத்தை “மென்மையான் அரசியல் கவிழ்ப்பு” என்கிறது. சென்ற மாதம் முகம்மது தற்போதைய போர்களம் ஈரானுக்குள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார். இதை ஈரான் முட்டாள்தனமானது என்று கூறியது.

இதனிடையே சென்ற மாதம் சவூதிக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இளவரசர் முகம்மதுவுடன் தனியே பேசினார். இப்போதைய மாற்றங்களுக்கு அந்த சந்திப்பு ஒரு முக்கிய சைகையாக இருக்கலாம் எனப்படுகிறது.
இளவரசர் சல்மான் அமெரிக்கா, ரஷ்யா என இரு நாடுகளுடனும் சமூக உறவைப் பேணி வருகிறார். சல்மானின் ஏற்றம் 34 பேர் கொண்ட அரச குடும்பத்தினரைக் கொண்ட விசுவாச சபையில் 31 பேரின் ஒப்புதலோடு நடந்தேறியுள்ளது. இதன் மூலம் அவரின் அதிகாரம் அரச குடும்பத்தினரின் முழு ஆதரவோடு விளங்கும் என்று நம்பப்படுகிறது.
சல்மான் பாதுகாப்பு மட்டுமின்றி பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வள அமைச்சராகவும் உள்ளார். சவூதி எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் பங்குகளை விற்கும் முடிவை அவரே எடுத்தார். அவருடைய ஏற்றத்தினை ஆதரிப்பது போல பங்குச் சந்தை 5 சதவீதப் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. சல்மானின் தந்தை சவூதியின் ஏழாவது மன்னராக 2015 ஆம் ஆண்டில் பதவியேற்கும் வரை அவரை வெளிவுலகிற்கு தெரியாது. இன்றைக்கு அவரது பதவி உயர்வை இதர அரேபிய நாடுகளான, ஓமான், எகிப்து, மொரக்கோ உட்பட பலரும் வரவேற்று வாழ்த்தியுள்ளனர்.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top