மற்ற வளைகுடா நாடுகளால் பயண மற்றும் வர்த்தக புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட கத்தாரில் வாழும் இந்தியர்கள் ஈத் பண்டிகையின் போது நாடு திரும்புவதற்கு உதவியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.
கொச்சி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய இடங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான சேவைகள் தோகாவுக்கு கூடுதலான விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கத்தார் நாட்டில் இந்தியர்கள் இக்கட்டான நிலையில் விடப்படவில்லையென்றாலும், பல வளைகுடா நாடுகளின் தடை காரணமாக டிக்கெட் பெற முடியாமல் இருக்கலாம் என்றார். கத்தார் நாட்டில் 7 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர்.
அரசுக்கு சொந்தமான இந்திய விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் வரும் வியாழக்கிழமை முதல் இந்த கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அரசின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தாரிலிருந்து நாடு திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத இந்தியர்களை அனுமதிக்கும் வகையில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று சுஷ்மாவிற்கு அவர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் 25 முதல் ஜூலை 8 ஆம் தேதிவரை தென்னிந்திய நகரமான திருவனந்தபுரத்திலிருந்து தோஹாவிற்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மும்பை – தோஹா – மும்பை இடையிலும் விமானங்களை இயக்கும் என்று அரசின் அறிக்கை கூறுகிறது.
இதனிடையே, இந்த நடவடிக்கை, இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.