ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., அணிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டது. ‘கட்சியில் தினகரனுக்கு, முக்கியத்துவம் அளிக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் ஒத்துழைக்க மாட்டோம்’ என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.
இதையடுத்து, தினகரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவை சந்தித்து, ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்தனர். சென்னையில், நேற்று மாலை இப்தார் நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி அலுவலகம் வந்தனர். அங்கு, முதல்வர் தலைமையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆலோசனை முடிவில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, 19ம் தேதி மதியம், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., அறிவித்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.இது குறித்து, நாங்கள் ஒன்று கூடி பேசினோம்; அதில், ஒருமனதாக, பிரதமர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை, ஏகமனதாக ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
‘சசிகலா ஆதரவோடு, இந்த முடிவு எடுக்கப்பட்டதா’ என்ற கேள்விக்கு, பதில் அளிக்க, முதல்வர் மறுத்து விட்டார். பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை, பன்னீர் அணியும் எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், என்ன முடிவு எடுப்பர் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.