அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்யின் 61–வது படம் ஆகும். ஏற்கனவே ‘தெறி’ படத்தில் சேர்ந்து பணியாற்றிய விஜய்யும் அட்லியும் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று படக்குழுவினர் தீவிரமாக பரிசீலித்து வந்தனர். ரசிகர்களும் தலைப்பை அறிய ஆவலாய் இருந்தனர். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விஜய் இன்று தனது 43–வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி பட தலைப்பை வெளியிட்டு உள்ளனர்.
விஜய்யும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘மெர்சல்’ தலைப்பை வெளியிட்டார். மெர்சல் பெயர் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் நேற்று ‘டிரெண்டிங்’ ஆனது. ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் முதல் தோற்றமும் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் (ஜூலை) நடத்த ஆயத்த வேலைகள் நடக்கின்றன. அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.