நீதிமன்றத்தில் சரணடைந்த பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, ஜாதிக பல சேன அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமை மற்றும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கொம்பனி தெரு போலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்ற பத்திரிகையாளார்கள் சந்திப்பில் இஸ்லாத்தையும் அல் குர் ஆனையும் அவமதித்தும் நிந்தித்தும் கருத்து வெளியிட்டமை தொடர்பாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிஸாரால் இவருக்கு எதிராக தனித் தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் ஏற்கனவே இவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணைகளுக்கு மீண்டும் சமூகமளிக்க தவறிய நிலையில் கடந்த வியாழக்கிழமை இவரை கைது செய்வதற்கான இரு பிடி ஆணைகளை கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அன்று புதன்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.