இந்தியாவில் ஃஎப் 16 ரக போர் விமானங்களை தயாரிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீடு மார்டின் நிறுவனத்துடன் டாடா அட்வாண்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்களை வெல்ல ஃபோர்ட் வொர்த் டெக்சாஸ் ஆலை திட்டமிட்டுள்ளது.
இந்திய ராணுவம் வசம் உள்ள சோவியத் சகாப்த விமானங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது. அதனால் இ ந்திய விமானபடைக்கு நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தேவைப்படுகிறது. ராணுவ தளவாட பொருட்களை வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு பங்குதாரருடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கும் நோக்கத்தோடு ராணுவ தளவாட பொருட்கள் இறக்குமதியை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்தியாவுக்கு ராணுவ தளவாட பொருட்களை வழங்குவதில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் 26ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பபை முதன் முறையாக மோடி சந்திக்கவுள்ளார். அவரது பயண அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களில் டாடா, லாக்ஹீடு மார்டின் நிறுவன ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஒப்பந்தம் மூலம் உலகளவில் ஃஎப் 16 ரக விமானங்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். 26 நாடுகளில் 3 ஆயிரத்து 200 ஃஎப் 16 ரக விமானங்கள் பறக்கின்றன. இதில் மிகவும் நவீனமயமான பிளாக் 70 மாடல் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.
100 முதல் 250 விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை இந்தியா இன்னும் வெளிப்படையாக கோரவில்லை. இதேபோல் ஸ்வீடன்’ஸ் ஸாப் நிறுவனமும் கிரிபன் ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ளது. ஆனால், இந்த நிறுவனம் உள்நாட்டு பங்குதாரரை இது வரை அறிவிக்கவில்லை.
டாடா நிறுவனம் ஏற்கனவே சி&130 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களுக்கான கூண்டு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.