கோடீஸ்வரரும், கண்டுபிடிப்பாளரும், தனியார் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவருமான இலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
“மனிதர்களை ஒரு பல-கிரக இனமாக உருவாக்குதல்” (Making Humans a Multi-Planetary Species) என்ற அவரது திட்டத்தில் இதன் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்து ஒரு உலகளாவிய அழிவு நிகழும் முன்னர் மனிதகுலத்தை பூமியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார். அந்த முயற்சிக்கான சரியான தேர்வு செவ்வாய் கிரகம்தான் என்கிறார்.
இம்முயற்சிக்குத் தேவையானது மிக அதிக அளவில் உந்துபொருள்(propellant) நிரப்பப்பட்ட, கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக்கலம் (interplanetary spaceship).
மஸ்கின் திட்டப்படி விண்கப்பலைக் காலியாக பூமியிலிருந்து முதலில் அனுப்பிவிட்டு, பின்னர் தொடர்ச்சியாக டேங்கர் ராக்கெட்டுகளில் எரிபொருளை அனுப்பி, வழியில் ஆங்காங்கே விண்கலத்தில் நிரப்பவெண்டும். ஒரு வெற்று விண்கப்பலுக்குக் கூட, மனிதகுலம் இதற்கு முன்னர் அனுப்பிய ராக்கெட்டுகளில் நிரப்பியதைவிட அதிக அளவில் எரிபொருள் தேவைப்படும்.
விண்வெளிக் கப்பலும், ராக்கெட் டேங்கர்களும், மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தக்கனவாக இருக்க வேண்டும். மேலும், செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தில் மீத்தேனை எரிபொருளாக நிரப்பி உபயோகித்து, மீண்டும் விண்கலத்தையும், டேங்கர் ராக்கெட்டுகளையும் பூமிக்கு அனுப்ப முடிய வேண்டும். இல்லையென்றால், செவ்வாய் கிரகம் விண்கப்பல்களின் சுடுகாடாக மாறிவிடும், என்கிறார் மஸ்க்.
மேலும் கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக் கப்பல், 100 பேர் 80 நாள்கள்வரை வசிக்கும் அழுத்தம் ஊட்டப்பட்ட தளத்துடன் மற்றொரு 400 டன் வரையிலான சரக்கு சேமிக்கும் இடமும் கொண்டதாக இருக்கவேண்டும், என்கிறார் மஸ்க். இச்சரக்குகளில் செவ்வாயில் கட்டுமானப் பணிக்கான சாதனங்களுடன், பிரயாணிகளின் சாமான்களும், எரிபொருள் சாலை கட்டத் தேவையான பொருட்களும் அடங்கும்.