ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். 1994-ல் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு தொடர்ச்சியாக இருமுறை அதாவது 2006-ம் ஆண்டுவரை எம்.பி.,யாக பணியாற்றினார். 2002 -ல் ஐ.நா. பொதுக்குழுவில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.