சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய உயரதிகாரி இன்று கொடுத்துள்ள விளக்கத்தின்படி “தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் வழக்கு பதிவு செய்ய மட்டுமே பரிந்துரை செய்ததாகவும், முதல்வர் பெயரையோ, வேறெந்த தனி நபரின் பெயரையோ குறிப்பிட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரான, ஜெயலலிதா இறந்த பின், அந்தத் தொகுதிக்கு, ஏப்ரல், ௧௨ல் இடைதேர்தலை,தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது, அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில், தினகரனும், பன்னீர் அணி சார்பில், மதுசூதனனும் போட்டியிட்டனர்.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு பெரும் அளவில், பணப் பட்டுவாடா செய்ததாக, புகார்கள் எழுந்தன; அதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடிதம் இந்நிலையில், பணப் பட்டுவாடா தொடர்பாக, தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக்கேட்டு, ஏப்., 26ல், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், வைரக்கண்ணன் என்பவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலாகவே இப்பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியதாகத் தெரிகிறது.