லண்டனிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது என்று போலிஸார் கூறினர்.
இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று போலிஸ் அதிகாரி ஸ்டுவர்ட் கண்டி தெரிவித்தார். பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது பிறந்த நாளைக் குறித்த ஒரு அறிக்கையில் கூறியதாவது :
நாட்டின் மிக துக்கமான மனநிலையை மறப்பதற்குக் கடினமாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் நமது நாடு பயங்கரமான துயரங்களை தொடர்ந்து கண்டிருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களுக்குள் லண்டனிலும் மான்செஸ்டரிலும் நடந்த 3 தீவிரவாத தாக்குதல்களின் துக்கம் மறைவதற்குள், சென்ற புதன்கிழமை இந்த 24 மாடிக் கட்டிட தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
24 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் உள்ள 120 குடியிருப்புகளில் சுமார் 600 பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள பலர் மாடியில் இருந்து குதித்தனர். இதில் பலத்த காயமடைந்தனர். யார், எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் கரும்புகை சூழ்ந்து கொண்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலைதான் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது என்று போலிஸார் கூறியுள்ளனர்.