அதிமுக அம்மா பிரிவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்பட 34 பேர், இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் சென்று சந்தித்தனர். அப்போது, வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு எல்லோரும் ஒருமித்து வாக்களிக்கலாம் என்றும், தினகரன் கட்சிப்பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; கட்சியை தினகரன் கவனித்துக்கொள்வார் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முதல்வர் தரப்பின் பதில் என்ன என்பது வெளியிடப்படவில்லை.