நேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரியதால் ஏற்பட்ட அமளியையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து இன்றும் மீண்டும் குரல் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதன்கிழமையன்று கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக, சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென்று மு.க. ஸ்டாலின் கோரினார்.
இதுதொடர்பான அமளி சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததால், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின் தி.மு.கவினர் தலைமைச் செயலகத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் இதுபற்றி கூறும்போது, மீண்டும் இப்பிரச்சனை குறித்து அடுத்த நாள் (வியாழக்கிழமை) சட்டமன்றத்தில் குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க கோருவோம் என்றார்.