லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு லண்டனில் அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தீ கட்டுக்கடங்காமல் விடாமல் எரிந்து வருவதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கிறது.
இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அந்த கட்டடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்னமும் மொத்தமாக எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனை பேர் அங்கு சிக்கியிள்ளனர் என்ற விவரம் தெரியாத நிலை உள்ளது.