மேற்கு லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
லண்டனில் இன்று அதிகாலை நேரத்தில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.