ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டு போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
கடந்த 2006- 2011-ல் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். இவர் பதவியிலிருந்தபோது, உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக ஜாபர்சேட் வீடு பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011-ல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த சஸ்பெண்ட் உத்தரவு 6 மாதத்துக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாபர் சேட். இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ஜாபர் சேட்டை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க கடந்த 2016 -ஏப்ரலில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஜாபர் சேட்டிற்கு தகுந்த பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனிடையே ஜாபர்சேட், மண்டபம் அகதிகள் முகாமுக்கு கூடுதல் டிஜிபியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஜாபர் சேட். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.