இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், கடந்த 2009ம் ஆண்டு, மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரில், பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரணடைந்தனர்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில், இறுதிக்கட்டப்போரின்போது ஏராளமானவர்கள் காணமல் போனதாகக் கூறப்பட்டது. அவர்களது உறவினர்களை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்தித்துப் பேசினார்.
அப்போது, இறுதிகட்டப் போரின்போது, சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இதற்காகக் கொழும்புவில் இன்று நடைபெறும் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.