தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இன்று 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இதனால் அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.
இரு கோஷ்டிகளும் தங்களுக்கே அதிமுக நிர்வாகிகள் ஆதரவு என்பதற்கான பிரமாண பத்திரங்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ததாலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு கோஷ்டிகளும் இணையும் என்றும் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இரு கோஷ்டி இணைப்புக்கான ரகசிய பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் இணைப்பு பேச்சுவார்த்தைக்கான குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் கோஷ்டியின் அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் முகாமிட்டு 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்தார்.
சசிகலாவை பொதுச்செயலராகவும் தினகரனை துணைப் பொதுச்செயலராக ஏற்பதாகவும் அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட பிரமாண பத்திரங்கள் இவை. இதுவரை மொத்தம் 3,10,000 பிரமாண பத்திரங்களை இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் கோஷ்டியும் இதேபோல் லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.