சர்ச்சைக்குரிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் நேற்றுடன் பதவி ஓய்வு பெற்றார். அவர் மீது சுமத்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு இன்னும் மேற்கு வங்கப் போலிசாரால் நிறைவேற்றப்படவில்லை.
அவருக்கு எதிரான தீர்ப்பும் , அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், போலிசாரால் நிறைவேற்றப்படும்வரையோ அல்லது உச்சநீதிமன்றத்தால் திருத்தப்படும்வரையோ, தொடர்ந்து நிலுவையில் இருக்கும்.
இதற்கிடையே, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயிடம், தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இடை நிறுத்துமாறு கோரி நீதிபதி கர்ணன் சமர்ப்பித்த கருணை மனு, சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் முடிவு பொதுவாக அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். இந்திய அரசு இந்த கருணை மனு விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே இதுவரை, இந்த விஷயத்தில் நீதிபதி கர்ணனுக்கு ஏதும் நிவாரணம் இல்லை.