கொச்சி அருகே சரக்கு கப்பல் – படகு மோதல்: குளச்சல் மீனவர் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம் கொச்சி அருகே மீன்பிடி படகின் மீது சரக்கு கப்பல் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதில் 2 பேர் உடல் மீட்கப்பபட்டது. ஒருவர் உடலை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது. கேரள மாநிலம் கொச்சி தோப்பும்படி துறைமுகத்தில் இருந்து, குமரியை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட 14 பேர் படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் கடலில் படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த படகு மீது பயங்கரமாக மோதியது.

இதில் மீன்பிடி படகு உடைந்து கவிழ தொடங்கியது. மீனவர்கள் கடலுக்குள் விழுந்து உயிருக்கு போராடினர். படகு மீது கப்பல் பயங்கரமாக மோதிய சத்தமும் மீனவர்களின் அலறல் சத்தமும் கேட்டு சிறிது தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த 11 மீனவர்களையும் அதிரடியாக மீட்டனர். மீதமுள்ள 3 மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொச்சி கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கிய குளச்சலை சேர்ந்த ஆன்டனி ஜாண் என்கிற தம்பிதுரை மற்றும் அசாமை சேர்ந்த ராகுல் உடல்கள் மீட்கப்பட்டன. அசாம் மாநிலத்தை சேர்ந்த மோடி உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்கப்பட்ட 11 மீனவர்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மீனவர்கள் மீது மோதிய கப்பலை தேடும் பணியை கடற்படையினர் தீவிரப்படுத்தினர். ரேடார் உதவியுடன் நடத்திய ஆய்வில் மீனவர்கள் மீது மோதிய கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடற்படையினர் அங்கு விரைந்து சென்று சரக்கு கப்பலை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்பர் என்ற சரக்கு கப்பல் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணைக்காக கடற்படையினர் அந்த கப்பலை கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் கடல் ஆழம் இல்லை என்பதால் நடுக்கடலில் நங்கூரமிட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக போர்ட் கொச்சி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கப்பல் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top