அமெரிக்க முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாராரா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்றதாகவும், மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.
நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாராரா தெரிவித்தார்.
பிரீட் பாராரா நியுயார்க் தெற்கு மாவட்ட முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞராக 2009-லிருந்து 2016 வரை பணியாற்றினார்.
இந்தியாவில் பிறந்த பிரீட் பாராரா, 1970-ல் அவரது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். வழக்கறிஞராக பணியாற்றிய இவர் ஜனநாயக கட்சியின் செனட்டர் சக் ஷூமரின் ஆலோசகராகவும் சிலகால பணியாற்றினார்.
பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களையும் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் பேர்பெற்றவர்.
பாராராவால் தண்டனையும் தண்டப்பணம் செலுத்தவும் வைக்கப்பட்டவர்கள் சிலர் :
- தேவ்யானி கோப்ரகெடே – நியுயார்க் இந்திய தூதரகத்தில் உதவி கான்சலாக பணியாற்றிய இவரது வீட்டில் வேலை பார்த்த ஒருவர் வெளியேறி, தனக்கு சரியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு பதிவு செய்தார். இந்த வழக்கில் இந்திய அரசின் எதிர்ப்புகளை மீறி தேவ்யானிக்கு பாராராவினால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது.
- நியுயார்க் வால் தெருவில் பங்குச் சந்தை உள் வர்த்தகம் (insider trading) என்ற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்னமும் அவரது கூட்டாளிகளும் பாராராவால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டனர்.
- சிட்டி பாங்க் – ஆபத்தான கடன்கள் என்ற குற்றச் சாட்டில், சிட்டி பாங்க் பெருந்தொகையை தண்டப்பணமாக செலுத்த வைத்தார்.