மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வின் (NEET) முடிவுகளை ஜூன் 26 அல்லது அதற்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப் பட்ட இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து அந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு அமைப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் ஜூன் 26 அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த மே 24-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை திங்கள்கிழமை (ஜூன் 12) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. பந்த், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் நடைமுறைகளை சிபிஎஸ்இ தொடங்கலாம்” என்று குறிப்பிட்டனர்.
அதேசமயம், “தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு (கவுன்சிலிங்), சேர்க்கை நடைமுறை ஆகியவை உச்ச நீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுக்கு உட்பட்டு தற்போதைய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். “நீட்” தேர்வு விவகாரம் தொடர்பாக மற்ற மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் எந்த வழக்கையும் விசாரணைக்கு ஏற்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என்று உத்தரவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.