பல்வேறு தரப்புகளில் இருந்து வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்வதற்காகவும் இன்னமும் வரி நிர்ணயம் செய்யப்படாத பொருட்களுக்கான வரியை நிர்ணயம் செய்யவும், ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று கூடுகிறது.
ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஒற்றைச்சாளர முறையில் வரிவிதிப்பதற்காக, எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை நிர்ணயிக்க 15 சுற்றுகளாக ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், இறுதிச்சுற்று ஆலோசனைக்கூட்டம் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லீ தலைமையில் டெல்லி விக்யான் பவனில் இன்று நடைபெறுகிறது. கடந்த கூட்டத்தில் தங்கத்திற்கு 3 சதவீதம் வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த கூட்டத்தின் முடிவுகளை உறுதி செய்யவும் வரிவிதிப்பு தொடர்பாக எழுந்த பிரச்சினைகளை பரிசீலித்து மறு ஆய்வு செய்யவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 15வது கூட்டத்தில், பல்வேறு பொருட்களுக்கு வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், சிகரெட் உள்ளிட்ட சிலவற்றுக்கு இன்னமும் வரி விகிதம் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும், தொலைத் தொடர்பு துறை, நிலக்கரி துறை, தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை ஆகிய துறைகளுக்கு விதிக்கப்பட்ட வரி சதவீதம் அதிகம் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன. திரைப்படத் துறையில் 28 சதவீத வரி விதிக்கப்படுவதற்கு நடிகர் கமல்ஹாசன் உள்பட பலர் ஆட்சேபம் எழுப்பியுள்ளனர். இந்த வரிவிதிப்புகள் குறித்து இன்றைய கூட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.