திருப்பதி கோவிலில் லட்டு பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஏழுமலையான தரிசிக்க எப்படி வரிசையில் நிற்கின்றனரோ அதே போல லட்டு பிரசாதம் வாங்கவும் வரிசையில் காத்திருந்துதான் வாங்கவேண்டும்.
இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குளறுபடிகள் இல்லாமல், பக்தர்களுக்கு வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காக தரிசன டிக்கெட், பிரசாதங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
இந்த நடைமுறை சில மாதங்களுக்கு பிறகே அமலுக்கு வரும் என்றாலும், மக்களிடையே ஆதார் கட்டாயம் குறித்த விழிப்புணர்வை முன்கூட்டியே ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.