பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் “காந்தி ஒரு சாதுர்யமான வியாபாரி” என்று தெரிவித்துள்ள கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தியின் பேரரான கோபால் கிருஷ்ண காந்தி அதுபற்றி கூறுகையில், “இது கேட்க சகிக்காத, குறும்புத் தனமான பேச்சு” என்றார்.
மகாத்மாவின் இன்னொரு பேரரான ராஜ்மோகன் காந்தி, “பிரிட்டிஷ் சிங்கத்தையும், இந்தியாவில் இனவாத விஷப் பாம்புகளையும் வென்ற மனிதர், ‘ஒரு சாதுரியமான வியாபாரி’யை விடவும் உயர்ந்தவர்” என்றார்.
“அமித் ஷாவின் கருத்து, சுதந்திரப்போராட்ட வீரர்கள், அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் மகாத்மா காந்தி மீது அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.
“அமித் ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும். அதற்காக மன்னிப்பும் கேட்கவேண்டும். அவர் வேண்டுமென்றே இப்படி சொல்லி இருக்கிறார். இது துரதிர்ஷ்டவசமானது” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.
“தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி என்ற வகையில், அனைவரும் அவரை மதிக்க வேண்டும். உலகம் முழுவதும் மதிக்கப்படுகிற ஒரு தலைவரை இப்படி கூறி இருப்பது மோசமானது” என்று இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.
“காங்கிரஸ் கட்சியையோ, பிற எதிர்க்கட்சிகளையோ அவர் விமர்சிப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் மகாத்மா காந்தியின் பெயரை இழுப்பது, இப்படிப்பட்ட வார்த்தைகளால் பேசியிருப்பது காந்தியை இழிவுபடுத்துவதாகும்” என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறியிருக்கிறார்.
“இது மகாத்மா காந்தி மீது பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டுள்ள அவமதிப்பை வெளிப்படுத்துகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கூறியிருக்கிறார்.