மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் மலேசியாவில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டிற்கு ஆபத்தானவர்களின் பெயர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.
வைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் “மலேசியாவுக்கு ஆபத்தானவர்” என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.
பினாங்கு மாநில முதல்வர் லிங் குவான் யங், துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பரிந்துரைத்தும் அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார். மலேசியாவில் தன்னை ஒரு கைதி போல் நடத்தியதாகவும், உணவு கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
இதன் பின்னணியில் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.