வருமானவரி தாக்கல் செய்ய பான் எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அட்டை அவசியம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. இதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆதார் அட்டையைப் பான் கார்டுடன் இணைத்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ளவர்களின் விவரங்கள் கிடைக்கும். இதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்க முடியும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்த கூடாது என கூறியுள்ளது. வருமான வரி சட்டம் 139 ஏ பிரிவை இதன் மூலம் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட உத்தரவு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என கூறியுள்ளது. இந்த விசாரணை முடியும் வரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்காலத் தடை விதிப்பதாக கூறியுள்ளது.