முன்பு டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தற்போது சென்னையில் ஒரு மாதகால போரட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் இன்று காலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கினர். இப்போராட்டம் ஜூன் 9-ம் தேதி முதல் 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார்.
விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனடியாக அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.