திரையுலகத்தில் பலரும் பலருக்கு வாக்கு கொடுப்பார்கள். அடுத்த வாரம் வந்து என்னைப் பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு சான்ஸ் உண்டு என்று சொல்வார்கள். அடுத்த வாரம் வந்தால் வாக்கு கொடுத்தவர் உள்ளேயே நுழைய விட மாட்டார்.
ஆனால், திரையுலகத்தில் சொன்னபடி செய்து காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சிறப்பாகப் பாடும் மூன்று பேருக்கு தான் இசையமைத்து வரும் ‘பலூன்’ படத்தில் பாட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன் கலந்து கொண்டு பாடிய பிரியங்கா, ரிஸ்வான், பிரியா ஜெர்சன் ஆகியோர் உட்பட பலர் யுவன் முன் பாடினார்கள்.
அவர்கள் பாடியதைக் கேட்ட யுவன் நிகழ்ச்சி முடிந்ததும் பிரியங்கா, ரிஸ்வான், பிரிய ஜெர்சன் ஆகியோரைத் தன் ‘பலூன்’ படத்தில் பாட வைக்க தேர்ந்தெடுத்தார். அவர் சொன்னது போலவே சில நாட்களுக்கு முன்பு அவர்கள் மூவரையும் தன் இசையில் ‘பலூன்’ படத்தில் பாட வைத்திருக்கிறார்.
சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பலர் மத்தியில் யுவனின் இந்த செயல் அவருடைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.