பிளாஸ்டிக் அரிசி: தமிழகம் முழுவதும் மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறிய மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை ஆகியவை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்டை மாநிலங்களில் புகார் எழுந்துள்ளனது.

பிளாஸ்டிக் பொருளானது மக்காத தன்மை உடையது. மண்ணில் மக்காத ஒரு பொருளை உடலில் உள்ள ஜீரண உறுப்புகள் எவ்வாறு செரிமானம் செய்யும். இதனால் பிளாஸ்டிக் அரிசி போன்ற உணவை உட்கொண்டால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் செரிமானப் பிரச்னைகளும், வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளும் வரக்கூடும். இதுதவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீண்ட காலப் பிரச்னைகளும் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உண்மை நிலை :

தமிழகத்தில் இதுவரை பிளாஸ்டிக் உணவுப் பொருள்கள் எதுவும் வரவில்லை என்று அனைத்துத் தரப்பினரும் உறுதி தெரிவிக்கின்றனர்.

கன்ஸ்யூமர் அசோஸியேசன்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் எம்.சோமசுந்தரம் கூறியது: பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வது சாதாரண அரிசி உற்பத்தியைக் காட்டிலும் மிகவும் பொருட்செலவு வாய்ந்தது. எனவே, பிளாஸ்டிக் அரிசி உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை.

குறுணை அரிசி என்று அழைக்கப்படும் சேதமடைந்த அரிசியைச் சேகரித்து, அதனை அரைத்து அதனுடன் வேறு பொருள்களைச் சேர்த்து அரிசி போன்று உருவாக்குகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் அரிசியில் வெள்ளை நிறத்தை வரவழைப்பதற்காக சில வேதிப்பொருள்களை சேர்க்கின்றனர்.

எனவே, இந்த அரிசி சாதாரண அரிசியைப் போல் எளிதில் வேகாமல் உள்ளது. இதைத்தான் மக்கள் பிளாஸ்டிக் அரிசி என்று புரிந்து கொள்கின்றனர். இதுபோன்ற அரிசி சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது என்றார்.

சர்க்கரையிலும் பிளாஸ்டிக் இல்லை: சர்க்கரையைப் பொருத்தவரை தமிழகத்தில் மணல் போன்ற சிறிய அளவு சர்க்கரையே புழக்கத்தில் உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்க்கரை போன்றவை கலப்பதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதிரி சேகரிப்பு: இந்நிலையில் தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளைச் சேகரிக்க உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி கூறியது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரிசியின் மாதிரிகளைச் சேகரித்து, அதில் ஏதேனும் போலி உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அரிசி குடோன்கள், மொத்த விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் என்று அனைத்திலிருந்தும் மாதிரிகள் சேரிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களின் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இதுவரை எங்கும் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top