தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.839 கோடியில் லேப்டாப் வழங்குவதற்காக தமிழக அரசின் எல்காட் நிறுவனம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து ஐசிஎம்சி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை நேற்று விசாரித்த ஐகோர்ட் இது தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. 2016-17ம் கல்வியாண்டிற்கு ரூ.839 கோடியில் 5 லட்சத்து 65 ஆயிரம் லேப்டாப் வாங்குவதற்காக எல்காட் நிறுவனம் டெண்டர் விட்டது. இந்த டெண்டர் ஹ்யுலெட் பேக்கர்டு மற்றும் லெனோவா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹ்யுலெட் நிறுவனம் 3.39 லட்சம் லேப்டாப்களையும், லெனோவா நிறுவனம் 1.36 லட்சம் லேப்டாப்களையும் வழங்க ஒப்புக் கொண்டன. இந்த இரண்டு நிறுவனங்களும் உள்ளூரில் தங்கள் சொந்த தொழிற்சாலையில் லேப்டாப்களை தயாரிக்காமல் சீனாவை சேர்ந்த இன்வென்டெக் மற்றும் விஸ்ட்ரான் இன்போகாம் என்ற இரண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுள்ளன.
இதற்காக லேப்டாப் ஒன்றுக்கு ரூ. 16 ஆயிரத்து 785 கொடுக்க முன்வந்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் லேப்டாப்களையே தமிழக அரசுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்பது எல்காட்டின் டெண்டர் விதிகளில் முக்கியமானதாகும். ஆனால் இந்த விதியை மீறி சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு ஹ்யுலெட் பேக்கர்டு நிறுவனமும் லெனோவா நிறுவனமும் ஆர்டர் கொடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த ஐசிஎம்சி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐசிஎம்சி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எல்காட் விதிகளை மீறி சீன நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தனியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளோம். சீன நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் ஏற்கனவே விசாரித்து வழக்கின் இறுதி உத்தரவுக்கு எல்காட் கட்டுப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி எல்காட் நிறுவனம் சீன நிறுவனங்களிடமிருந்து லேப்டாப் வாங்க முயற்சித்து வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஐசிஎம்சி நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது. இந்த மனுவை நீதிபதி துரைசாமி நேற்று விசாரித்தார். அப்போது, ‘இது தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.