பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது.
ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, ஆனாலும், அதுவே தனிப்பெரும் கட்சியாக இருக்கும்.
கன்சர்வேடிவ் கட்சி வட அயர்லாந்தின் பல யூனியனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயலுகிறது. இது வெற்றி பெறவில்லை என்றால் சிறுபான்மை அரசுதான் அமைக்க முடியும். இதனால் மீண்டும் விரைவிலேயே மற்றொரு தேர்தல் வரக் கூடும்.
“நாட்டிற்கு நிலையான ஆட்சி தற்போது மிக அவசியம். நாம் அதிக இடங்களை பெறுவதாக இருந்தால், நிலையான ஆட்சியை வழங்க வேண்டியது நம் கடமை” என்று பிரதமர் தெரெசா மே கூறியிருக்கிறார்.
தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, தேறாத கட்சி என்று கைகழுவப்பட்ட தொழிற்கட்சி, எதிர்பாராத விதமாக பல இடங்களை வென்றிருக்கிறது.
பொருளாதாரத்தில் `சிக்கன நடவடிக்கை` அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் கூறியிருக்கிறார்.
தெரீசா மே பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.
சில கன்சர்வேடிவ் கட்சியினர் அவர் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
கடந்த தேர்தலில் இருந்த்தை விட வாக்குப்பதிவு இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.