தீவிரவாதத்துக்கு துணை போவதாக கத்தார் நாட்டின் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, பக்ரைன் மற்றும் எகிப்து ஆகிய 4 நாடுகள் கடந்த வாரம் தடை விதித்தது. இதை ெதாடர்ந்து அந்நாட்டுக்கான விமான போக்குவரத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் நிறுவனமும் தனது விமான போக்குவரத்தை சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ரத்து செய்துள்ளது. இதனால் கத்தாரிலிருந்து சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும ஐக்கிய அரபு குடியரசு செல்ல வேண்டியவர்களும், இந்த நாடுகளிலிருந்து கத்தார் செல்ல வேண்டியவர்களும் ஆங்காங்கு தவித்து வருகிறார்கள்.
இதற்கு தீர்வு காணும் வகையில் மஸ்கட் வழியாக தங்கள் நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியாவில் தவித்து வரும் பயணிகள் முடிவு செய்துள்ளனர். மஸ்கட் நடுநிலை வகிப்பதால் கத்தார் மற்றும் சவுதி விமானங்கள் அங்கு தரையிறங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.
இதற்காக சிறப்பு விமானங்களை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மஸ்கட் அனுப்பியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள கத்தார் பயணிகள் ஓமன் ஏர் நிறுவனத்தின் விமானம் வழியாக மஸ்கட் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து கத்தார் விமானம் மூலம் தோகா கொண்டு வரப்பட்டனர். இதற்காக ஓமன் ஏர் நிறுவனம் தோகாவுக்கு வரும் 14ம் தேதி வரை மிகப்பெரிய விமானங்களை இயக்க இருப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தவிர கத்தார் ஏர்வேசுக்கு ஓமன் ஏர் நிறுவனம் 3 விமானங்களை வாடகைக்கு கொடுத்துள்ளது. இந்த விமானங்கள் மஸ்கட்-ஜெட்டா-மஸ்கட் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் மஸ்கட் விமான நிலையம் தற்போது மிகவும் பிசியாக உள்ளது. கத்தாருக்கு உதவியாக குவைத் விமான போக்குவரத்து நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. சவுதியில் உள்ள கத்தார் நாட்டினர் குவைத் வழியாக நாடு திரும்ப குவைத் ஏர்வேஸ் விமானங்களையும் கத்தார் ஏர்வேஸ் ஏற்பாடு செய்துள்ளது.
சவுதியில் சிக்கியுள்ள கத்தார் நாட்டினர் அனைவரும் நாடு திரும்பும் வரை கத்தார் விமான போக்குவரத்து நிறுவனம் சிறப்பு விமானங்களை இயக்கும் என கத்தார் ஏர்வேசின் தலைமை அதிகாரி அக்பர் அல் பேகர் தெரிவித்துள்ளார். அதிக அளவில் பயணிகளை ஏற்றி வருவதற்காக மிகப்பெரிய விமானங்களை கத்தார் ஏர்வேஸ் தற்போது பயன்படுத்தி வருவதாகவும், கத்தார் ஏர்வேசில் டிக்கெட் புக் செய்துவிட்டு, வேறு ஏர்வேசில் நாடு திரும்புகிறவர்களுக்கு முழு கட்டணம் திரும்ப தரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய அரபு குடியரசும் கத்தார் மீது தடை விதித்திருப்பதால் அந்நாட்டிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அந்த நாட்டிலும் அதிக பயணிகள் தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வர தொடங்கியுள்ளன.