ஈரான் நாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகஅரசின் சொந்த செலவில், சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துபாயில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.
அவர்களில் 15 பேர் ஈரான் எல்லையைத் தாண்டியதாக் கூறி, அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து 13 தமிழக மீனவர்களும், குஜராத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், அவர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தமிழக மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, 13 மீனவர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அவர்களை தமிழக அரசு சார்பில் உயரதிகாரிகள் வரவேற்றனர். இதேபோல், மேலும் 2 பேர் திருச்சி விமான நிலையம் வந்திறங்கினர். பின்னர் மீனவர்கள் அனைவரும் தமிழக அரசின் சொந்த செலவில், அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.