ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தீர்ப்பளிக்கிறது.

வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தங்கள் மனுக்களில் “ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.

எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் “பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, “போலி பான் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆதார் அமலாக்கத்தின் மூலம் ஏழைகளுக்குப் பலனளிக்கும் பல்வேறு திட்டங்களில் ரூ.50,000 கோடியை மத்திய ஆரசால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top