மத்திய பிரதேசம் மாண்ட்சர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர்.
வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
மாண்ட்சர் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாண்ட்சர் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.
இதனிடையே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி இன்று போபாலில் இருந்து மாண்ட்சர்மாவட்டத்திற்கு பயணம் செய்தார். ஆனால் ராகுலை போலீசார் மாண்ட்சர் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க வில்லை .
இதனால் அவர் பைக்கில் எந்த வித பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லாமல் செல்ல முற்பட்டார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெற கூடாது என்பதற்காக ராகுல் காந்தி மாண்ட்சர் மாவட்டத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதாவதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ராகுல் கூறியதாவது: ‘மோடியால் பணக்காரர்களுக்கு மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும். ஆனால், விவசாயிகளுக்கு செய்ய முடியாது. விளைபொருட்களுக்கு அவரால் சரியான விலை கொடுக்க முடியாது, போனஸ் கொடுக்க முடியாது, இழப்பீடு வழங்க முடியாது. துப்பாக்கி தோட்டாக்களை மட்டுமே வழங்க முடியும். மாண்ட்சர் மாவட்டத்தில் விவசாயிகள் இறந்ததற்கு பிரதமர் மோடியும், மாநில முதல்வர் சிவராஜ் சவுகானும்தான் பொறுப்பாளிகள்.’
இவ்வாறு அவர் கூறினார்.