இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை ஜூலை 17-ம் தேதி நடத்துவதாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நசிம் ஜைதி இன்று அறிவித்தார்.
இத்தேர்தலுக்கான கால அட்டவணை :
ஜூன் 14 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய தொடக்க நாள்
ஜூன் 28 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்
ஜூன் 29 – வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு நாள்
ஜூலை 1 – வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்
ஜூலை 17 – குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் நாள்
ஜூலை 20 – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்
மேலும் திரு. நசிம் ஜைதி கூறியதாவது :
“இந்த தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள். அந்தந்த மாநில சட்டமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம். அவசர காரணங்களுக்காக வேறு இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்றால் 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது. வாக்களிப்பவர்களுக்கு எந்த வகையிலும் லஞ்சமோ பரிச்ப்பொருளோ கொடுக்ககூடாது.”