நமது உடலில் சிறிது அளவு மட்டுமே சுரக்கும் ஆல்டிஹைட் எனப்படும் ரசாயனம், இன்றைய சூழலில் நம்மைச் சுற்றியுள்ள, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் ஏற்படும் மரபணு சேதத்தைச் சரிசெய்யும் அணுக்களின் செயல்பாடானது பாதிக்கப்பட்டு, புற்றுநோயை விளைவிக்குமாம்.
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களான மரசாமான்கள், அழகுசாதனங்கள், ஷாம்பு மற்றும் மதுபானங்களில் பொதுவாக காணப்படும் ரசாயனங்கள், இயற்கையாகவே நமது உடலில் சிறிது அளவு மட்டுமே இருக்க வேண்டிய ஆல்டிஹைடின் அளவை அதிகரிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை இது அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இந்திய வழி பேராசிரியரான அசோக் வெங்கடராமன் மார்பக புற்றுநோய் மரபணுவான பி.ஆர்.சி.ஏ.2-வை வைத்து மேற்கொண்ட ஆய்வில் சாதரணமாக நம்மைச் சுற்றி காணப்படும் இந்த ஆல்டிஹைட்டின் அதிகமான வெளிப்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். நம் உடல் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் தன்மையுடையது. ஆனால் இந்த ஆல்டிஹட்டின் மிகுதியால் ஏற்படும் மரபணுக்களின் சேதமானது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட உயிரணுக்களை உடையவர்களை இது மேலும் பலவீனம் அடையச் செய்யும்.
இதைப்பற்றி பேராசிரியர் வெங்கடராமன் கூறுகையில், “இந்த ஆய்வானது நமது தினசரி வாழ்வில் இந்த வகையான ரசாயனங்களுக்கு நாம் அதிக அளவில் வெளிப்படுத்தப்படும் பொழுது அது எவ்வாறு புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கிறது என்று அறியவும், மேலும் ஏன் பலவீனமான மரபணுக்களை உடையவர்கள் சுலபமாக புற்றுநோய் வயப்படுகிறார்கள் என்பதை விளக்கவும் ஆகும்” என்றார்.
இந்த ஆல்டிஹைட்ஸிற்கு ஒரு பொதுவான ஆதாரம் மதுபானங்களே ஆகும், நாம் குடிக்கும் மதுவானது அசிடால்டிஹைட் என்னும் ஒரு ரசாயனத்தை நம் உடலில் சுரக்க செய்து இயற்கை நொதியில் முறையை உடைக்கிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதிலும் 50 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பாக ஜப்பான், சீனா மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் பொதுவாக 30-60% குறைபாடுடைய மரபணுக்களை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்.