பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த திவ்யா குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் திவ்யா கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகள் தானாகவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் கொலை செய்த குழந்தைகளை அவசரஅவசரமாக மண்ணில் புதைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தைகள் இயற்கையாக உயிரிழக்கவில்லை, கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து திவ்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் இரட்டை குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால், பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று புதைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை கொன்றதாக தாய் திவ்யாவை கோட்டார் போலீசார் கைது செய்தனர். பெற்ற குழந்தைகளை தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.