மணிலா சூதாட்டக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பின் வேலையல்ல என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா என்னும் அந்த சூதாட்ட விடுதியில் 40 பேர் இறந்தனர். முன்னதாக அந்தத் தாக்குதலுக்கு ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடச் செல்லவிருப்பதாகத் தெரிவித்த திரு. டுடார்ட்டே, அது ஐ. எஸ். பயங்கரவாதிகளின் செயல் அல்ல என்பது தமக்குத் தெரியும் என்றார்.
இந்த கொடூர தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 40 பேரை சுட்டுக் கொன்ற நபர் யார் என்ற விபரத்தை மணிலா போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவரின் பெயர் ஜெசி கார்லோஸ் ஜேவியர்(42). பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அதே சூதாட்ட விடுதியின் நிரந்தர வாடிக்கையாளரான இவர் ஏற்கனவே பலமுறை இங்கு சூதாடி, ஏராளமான பணத்தை இழந்த வெறியில் இந்த கொலைவெறி தாண்டவத்தில் அவர் ஈடுபட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
சூதாடுவதற்காக நிறைய பேரிடம் பெரும் தொகையை கடனாக பெற்று அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இந்த விபரீத முடிவில் அவர் இறங்கியதாக ஜெசி கார்லோஸ் ஜேவியர் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.