இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன.
சிறிய தீபகற்பமான கத்தாரோடு நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் செயல்படும் தொடர்புகளை ரியாத் மூடியுள்ளதாக சௌதி அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) தெரிவித்திருக்கிறது.
இதனை ‘நேர்மையற்ற’ முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் கத்தார், இதற்கு ‘எந்த அடிப்படையும் இல்லை’ என்கிறது.
அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருக்கும் சக்தி மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடையில், முக்கியமான பிளவாக இந்த எதிர்பாராத திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாடுகளுக்கும், அவற்றின் அருகிலிருக்கும் இரானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்திருக்கும் பின்னணியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இரானின் ஆதரவோடு செயல்படும் ஆயுதப்படைகளோடு கத்தார் ஒத்துழைப்பதாக சௌதியின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
திங்கள்கிழமை அதிகாலையில் கத்தாருடனுள்ள ராஜீய உறவுகளை திரும்ப பெற பஹ்ரைன் எடுத்த நடவடிக்கைக்கு பின்னர், சௌதி அரேபியவும் ராஜீய உறவுகளைத் திரும்ப பெற்றது.
இதனை தொடர்ந்து அவற்றின் நட்பு நாடுகளும் வெகுவிரைவாகவே இதே நடவடிக்கையை எடுத்தன.
“தீவிரவாதம், கடும்போக்குவாதம் போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே” இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதை சௌதியின் அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) மேற்கோள்காட்டியுள்ளது.