மோடியின் ஆட்சியைப் பற்றி அ.தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல் வெளியான கவிதை

மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல்  ஒரு  கவிதை வெளியானது.  அது குறித்து தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டபோது அதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.  ஆனால் நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் இதைப்பற்றி கூறுகையில் “ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவிரும்பலாம். ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை” என்றார்.

மோடியின் ஆட்சியைப் பற்றிய அந்த கவிதை :

 

மோடி அரசின் மூன்றாண்டு !
இது- நாடு காக்கும் அரசா?
மாடு காக்கும் அரசா?
இது- சாதனை அரசா?
சி.பி.ஐ. சோதனை அரசா?

டிஜிட்டல் இந்தியா….
மேக் இன் இந்தியா…
கிளீன் இந்தியா… என
வாயாலே வடைசுடும் அரசா?
வாக்களித்த மக்களுக்கு
விடை சொல்லும் அரசா?

சகலரும் வாழ்த்தும் அரசா?
சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா?
கண்ணீர் துடைக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?

கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?

ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை…
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா?
வாய்ஜாலத்தில் ஏய்த்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?

மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்…
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
விலைவாசியை குறைத்த அரசா?
வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா?

ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு…
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு…
ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு…
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு…

வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?

எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு !

ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு !

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top