பதிவு செய்யப்பட்ட வரலாற்றின்படி உலகில் மிக அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவர் ?!

பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளின்படி, உலகில் மிக அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவர்  சீனாவின் லி சிங் யுவென் என்று கருதப்படுகிறார். இவர் 256 வயது வரை உயிர் வாழ்ந்திருந்தார் என கருதப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ் ஏடு 1930-ல் வெளியிட்ட ஒரு கட்டுரையின்படி, வு சுங்-சியே என்ற செங்டூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், பண்டைய சீனப் பேரரசின் ஒரு ஆவணத்தைக் கண்டுபிடித்தார். 1827 – ஆம் ஆண்டைச் சார்ந்த அந்த ஆவணத்தின்படி 150 வயதான முதியவர் லி சிங் யுவெனுக்கு அப்போதைய சீன அரசாங்கம் வாழ்த்துதல் தெரிவித்திருக்கிறது. மீண்டும் அவருடைய 200-வது வயதிற்கு அரசாங்கம் வாழ்த்து தெரிவித்த , 1877 – ஆம் ஆண்டைச் சார்ந்த இன்னுமொரு ஆவணமும் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

1928 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் நிருபர் எழுதிய தகவல் : லீயின் அண்டை வீட்டிலுள்ள பல முதியவர்கள், தாங்கள் சிறுவர்களாக இருந்தபோதே தங்களுடைய தாத்தாக்கள் அவரை ஒரு வளர்ந்த மனிதராக அறிந்திருந்ததாக கூறியிருக்கின்றனர்.

லி சிங் யூனின் சொந்த மானிலத்தில் நிலவும் சில பழங்கதைகளின்படி, அவர் 10 வயதில் தனது மூலிகைத் தொழிலைத் தொடங்கியிருக்கிறார். மலைப் பிரதேசங்களில் மூலிகைகள் சேகரித்து வருகையில்,  மூலிகைகளால் வாழ்நாள்களை அதிகரிக்கும்  ஆற்றலைப் பற்றி அறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக, அவர் லிங்க்சி, கோஜி பெர்ரி, காட்டு ஜின்ஸெங், ஷூ வு, கோடு கோலா மற்றும் நெல் மது ஆகியவற்றைக் கொண்ட உணவையே உண்டார்.  இடையில் 1749 ஆம் ஆண்டில், 71 வயதில், அவர் சீன ராணுவத்தில் தற்காப்புக் கலை ஆசிரியராக சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. முதல் நூறு ஆண்டுகளுக்கு அவர் மூலிகை சேகரிப்பில் தொடர்ந்தார்.  பின்னர் அவர் மற்றவர்கள் சேகரித்த மூலிகைகளை விற்பனை செய்தார்.

லி, அவரது சமுதாயத்தில் எல்லோருக்கும் பிரியமான நபராக இருந்தாராம். 23 முறை திருமணம் செய்து 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாயும் இருக்கிறாராம்.

லி-யிடம் அவரது நீண்ட ஆயுள்காலத்தின் இரகசியம் என்னவென்று வினவப்பட்டபோது, அவர் கூறியது : “அமைதியான மனதுடன், ஒரு ஆமை போல உட்கார்ந்து, ஒரு புறாவைப்போல சுறுசுறுப்பாக நடந்து, ஒரு நாய் போல தூங்கவதே எனது இரகசியம்.”

நம்பமுடியாத நீண்ட ஆயுள் இரகசியமாக லி அமைதியுமான மனநிலையையும் மூச்சுப் பயிற்சியையும் கூறினாலும், அவரது உணவும் அதற்கான ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம்.

இச்செய்தி ஒரு போலித் தகவலாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், தொலைதூர இடங்களில் வாழ்ந்த பல சீன கிராமவாசிகள் தங்கள் மரணத்தை போலியாக ஏற்படுத்திக் காண்பித்துவிட்டு முன்பே இறந்து போன தங்கள் தாத்தா அல்லது பெற்றோரின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு புதிய அவதாரத்தில் உலவி வந்திருக்கின்றனர். இவ்வாறு செய்வதால் அரசாங்கம் அவர்களை இராணுவத்தில் சேர்த்து போரில் ஈடுபடுத்துவதை அவர்களால் தவிர்க்க முடிந்திருக்கிறது.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top