ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். “அதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் கூறினார்.
தூய பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையில், விளாடிமிர் புடின் கூறியதாவது :
ரஷ்ய தலையீடு குறித்த குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, மிஞ்சுவது வெறும் ஊகங்களேயன்றி வேறெதுவும் இல்லை. இப்பயனற்ற, தீங்கு விளைவிக்கும் வதந்திகள் நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில் “இவ்வதந்திகள் சர்வதேச உறவுகளையும், உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியவற்றை சேதப்படுத்தும். நாம் சரியான ஒரு கூட்டணியைத் தொடங்க வேண்டியது அவசியமாகும்.” என்றார்.
“ரஷிய ஹேக்கர்களுடையதாக கூறப்படும் இன்டர்னெட் ஐ.பி. முகவரிகள் மிக எளிதாக தில்லுமுல்லு செய்து மாற்றப்படக்கூடியவையாகும். ஒரு 3 வயது குழந்தையால் அதைச் செய்ய முடியும். ஆகவே, அதையெல்லாம் ஆதாரமாக ஏற்க முடியாது.” என்றும் விளாடிமிர் புடின் கூறினார்.