கவிஞரும் தமிழ் பேராசிரியருமான அப்துல் ரகுமான் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 80.
இருதய நோய், சிறுநீரக நோய்களால் அவதிப்பட்டுவந்த அவர் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில், மூச்சுத் திணறலால் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
மதுரை நகரில் உள்ள சந்தைப்பேட்டையில் சையது அகமது – ஜைனத் பேகம் தம்பதிக்கு 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்த அப்துல் ரகுமான், பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் அந்நகரிலேயே முடித்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற இவர், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
தியாகராசர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கவிதைகளை எழுத ஆரம்பித்த அப்துல் ரகுமான், பிறகு தமிழில் உருவெடுத்த வானம்பாடி கவிதைப் போக்கின் முக்கியக் கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
அப்துல் ரகுமான் அந்த காலகட்டத்தில் எழுதிய `பால்வீதி` என்ற கவிதை மிகுந்த கவனத்தைப் பெற்றது. 1995ல் வெளிவந்த இவரது ஆலாபனை என்ற தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
கவிதைகள் மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். புதுக்கவிதை குறித்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
2009 முதல் 2011 வரை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் அப்துல் ரகுமான் செயல்பட்டார்.