அமெரிக்காவில் நடைபெற்ற, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய், 12, முதலிடம் பெற்றார். இவ்வகை போட்டியில், 13-வது முறையாக தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ‘ஸ்பெல்லிங்’ சொல்லும், ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நுாற்றுக் கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.
இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 291 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியாக, 15 பேர் மட்டும், இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய் மற்றும் ரோஹன் ராஜீவ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கனடாவில் வசிக்கும் அனன்யா வினய், போட்டியில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு, 26 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடக்கும் இந்த போட்டியில், தொடர்ந்து, 13வது முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பொதுவாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அதிகமாகப் படித்தவர்களாகையால், தங்கள் குழந்தைகளை இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கின்றனர். இருப்பினும், அமெரிக்க விளையாட்டுத் துறையில் இவர்களின் பங்கு வெகு குறைவே. இந்தியக் குழந்தைகள் கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்ற அமெரிக்க விளையாட்டுகளான பேஸ்பால், அமெரிக்கன் புட்பால் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.