சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4 மற்றும் 5வது தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளை இடித்து தரைமட்டமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை சில்க்ஸில் கடையில் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. கடந்த 2 நாள்களாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தனர். இதனிடையே கட்டடத்தின் முகப்பு பகுதியும், 4 மாடிகளும் சீட்டுக் கட்டு போல் சரிந்து விட்டது.
இந்நிலையில் மீதமுள்ள கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கட்டடத்தின் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் உள்ளதால் எஞ்சிய கட்டடத்தையும் இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். கட்டடத்தை இடிப்பதற்கான இயந்திரம் வரவழைக்கப்பட்டு மனிதர்களை கொண்டு இந்த கட்டடம் முழுவதுமாக தகர்க்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்டடத்தை இடிப்பதற்கான பிரத்யேக இயந்திரம் சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. இயந்திரங்கள் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென 4வது தளத்தில் மீண்டும் தீ பற்றி எரியத் துவங்கியது. மேலும் 5வது தளத்தில் இருந்தும் அதிகளவு புகை வெளியேறி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.