தியாகராய நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் குமரன் சில்க்ஸ் துணிக்கடை மற்றும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அடுக்குமாடிக் கடையின் தரைத்தளத்தில் இருந்து இன்று காலை பயங்கர கரும்புகை வெளியேறியது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் நவீன கருவிகளை கொண்டு புகையை வெளியேற்றி வருகின்றனர். அடர் புகைக்காரணமாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். புகை எங்கிருந்து வருகிறது என்பத கண்டுபிடிக்க முடியாததால் தீயை அணைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துணிக்கடையில் இருந்து இதுவரை 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பல மணி நேரமாக கரும்புகை வெளிறேறி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.