புதன்கிழமை காலையில் காபூலின் மிகவும் பாதுகாப்பான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியை ஒரு பெரிய வெடிகுண்டு வெடிப்பு உலுக்கியது. குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்டதோடு 350 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் தற்கொலை கார் குண்டுவீச்சினால் ஏற்பட்டதாக நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்குதல் நடந்த இடத்தின் அருகில் சேதமாகின.
“தற்போது இத்தாக்குதலின் இலக்கு எது என்று எமக்குத் தெரியாது, ஆனால் பெரும்பாலும் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் நஜிப் டேனிஷ் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து அரை மைல் வரை கடைகள், உணவகங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரப் கானி இப் பாரிய தாக்குதலை கண்டனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதிகள், புனித மாதமான ரமாதானில், நன்மை, ஆசீர்வாதம், பிரார்த்தனை செய்யும் மாதம் என்றும் பாராமல் எங்கள் அப்பாவி மக்களைக் கொல்வதை நிறுத்தாமல் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காபூலில் சமீப மாதங்களில், அடிக்கடி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிரவரம் மோசமடைந்து வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.